திருச்சி,
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதே பள்ளியில் கணித ஆசிரியராக முசிறி ஜடமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமரவேல் (வயது 40) பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவியுடன் பேசி பழகி வந்த குமரவேல் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பலமுறை மாணவியை கட்டாயப்படுத்தி மிரட்டி பலாத்காரம் செய்தார். இது பற்றி மாணவி முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 31-10-2022 அன்று புகார் செய்தார்.
அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் குமரவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோட்டில் நீதிபதி சண்முகப்பி ரியா முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதனையடுத்து ஆசிரியர் போலீஸ் காவலுடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.