செங்குன்றம்,
செங்குன்றத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளைப்போனது.
திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம் ஆர்.ஜி.என். காலனி பெரியார் தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜ் (வயது 55). இவர், சோழவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 37 பவுன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இமானுவேல்ராஜ் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
மேலும், செங்குன்றம் உதவி கமிஷனர் பிராங்கிளின் ரூபன், இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.