தமிழக செய்திகள்

ஒரே நேரத்தில் விடைத்தாள் திருத்துவதுடன் தேர்தல் பணி: கூடுதல் சுமையால் தவிக்கும் ஆசிரியர்கள்

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. தேர்தல் பணியில் சுமார் 14 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது மற்றும் வாக்குப்பதிவு தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

2-வது கட்ட பயிற்சி வகுப்பானது சில மாவட்டங்களில் வருகிற சனிக்கிழமையும், சில மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தேர்தல் பணிகளை பொறுத்தவரை அரசு ஊழியர்களை விட ஆசிரியர்கள் தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். தமிழகத்தில் தற்போது பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியானது கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 21-ந்தேதி வரை இந்த பணி தொடர உள்ளது.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்து விட்டதால், அந்த விடைத்தாள்களை திருத்தும் பணியும் வருகிற 10-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஒரு நாள் கூட விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்போது பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது இன்று முடிவடைகிறது. நாளை (17-ந்தேதி) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை காலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்த பின்னரே மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தல்கள் கோடை விடுமுறை காலத்தில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதாகவும், வரும் காலங்களிலாவது இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு நெட், செட் பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ஜவகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.