சென்னை,
உலக அளவில் பலகோடி மக்களால் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து சில மணிநேரம் நீக்கம் செய்யப்பட்டது.
பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம் உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் டெலிகிராம் திடீரென நீக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை உலகளாவிய தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரத்திற்கு பின்னர் அந்த செயலி மீண்டும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் கடுமையான விதிமுறைகளை மீறும் வகையிலான சில தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் (சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பானவை) டெலிகிராம் தளத்தில் கண்டறியப்பட்டதாக ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன், டெலிகிராம் நிறுவனம் தனது தளத்தில் இருந்த அந்த சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கியதுடன், அதற்கு காரணமான பயனரையும் நிரந்தரமாக தடை செய்தது. இந்த துரித நடவடிக்கையை அடுத்து, சில மணிநேரங்களிலேயே டெலிகிராம் செயலியை மீண்டும் ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதித்தது.
இந்த தற்காலிக நீக்கத்தால் சில மணிநேரம் புதிய பயனர்கள் செயலியை பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஏற்கனவே உள்ளவர்கள் அப்டேட் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், ஏற்கனவே ஐபோன்களில் டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் பயனர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் சேவைகள் வழக்கம் போல் தடையின்றி இயங்கின.
அதே சமயம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து நீடித்தது குறிப்பிடத்தக்கது. "என் வீழ்ச்சி குறித்த செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை" என டெலிகிராம் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.