தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு சொந்தமான யானை ஆதிநாயகி, திருக்கோளுர் கோவில் யானை குமுதவல்லி மற்றும் இரட்டைத்திருப்பதி கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி ஆகிய மூன்று யானைகளும் ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு சொந்தமான ஆதிநாயகி என்ற யானையை பாகன் தினமும் காலையில் கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த யானை வெறும் வயிற்றுடன் செல்லமாட்டேன், டிபன் சாப்பிட்டுவிட்டுதான் செல்வேன் என ஒரு தள்ளுவண்டி கடைக்கு சென்று உணவை ருசிக்கும் ருசிகர சம்பவம் 8 வருடங்களாக அரங்கேறி வருகிறது.
இந்த வியப்பான சம்பவத்தில் யானைக்கு உணவளிப்பவர் மாணிக்கம். இவர் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அருகே தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். தினந்தோறும் ஆதிநாயகி யானை கோவிலுக்கு வந்து செல்வதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதே ஆவலுடன் ஆதிநாயகி யானையும் ஓடோடி அவரது கடைக்கு வருகிறது. அவர் தனது கடையில் தயாரிக்கப்பட்ட இட்லியை ஒரு வாழை இலையில் வைத்து யானைக்கு ஊட்டுகிறார். யானையும் அதை வாயில் போட்டு நன்றாக ருசிக்கிறது. சுவையாக இருக்கிறதா ஆதிநாயகி? என மாணிக்கம் கேட்டால், ஆமாம் என்று சொல்லும் விதமாக யானை தலையை ஆட்டுகிறது.
சில நாட்களில் மாணிக்கம் கடையை பூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், அந்த வழியாக பாகனுடன் வரும் ஆதிநாயகி யானை, தள்ளுவண்டி கடைக்கு முன் நின்று கொண்டு வரமறுத்து விடுகிறதாம். 5 நிமிடம் கடையையே உற்று பார்த்த பிறகுதான் அங்கிருந்து கடந்து செல்லும் என அந்த பகுதி மக்கள் வியப்புடன் கூறுகின்றனர். தள்ளுவண்டி கடையில் யானை காலை உணவு சாப்பிடுவதை அந்தப் பகுதி மக்கள் பார்த்து ரசிக்க தவறுவதில்லை.