தமிழக செய்திகள்

கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்! - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மதுரை,

கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஊதிய உயர்வு

நெல்லை மாவட்டம் மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த நரசிம்ம கோபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் 26.11.2005 அன்று அர்ச்சகராக மாதம் ரூ.26- ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டேன். பின்னர் எனது பணி முறைப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகும். தற்போது எனக்கு மாதம் ரூ.4,281 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல், ஆயிரக்கணக்கான அர்ச்சகர்களும் பிற கோவில் பணியாளர்களும் மிகக் குறைந்த ஊதியத்தையே பெற்று வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு இதே நீதிமன்றம், அர்ச்சகர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் பிற கோவில் பணியாளர்களுக்கு. குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படியும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதத்திலும் ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

உத்தரவை பின்பற்ற வேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை பொறுத்த வரை ஏற்கனவே நீதிபதி மகாதேவன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறபித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT