சென்னை,
மகளிர் சுயஉதவி குழுவினரை கொண்டு ரேஷன் கடை பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்வது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி நிலவரப்படி 1,714 விற்பனையாளர் பணியிடங்கள், 176 கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்காலி பணியிடங்களால் விற்பனையாளர்கள் கூடுதல் பொறுப்பில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் பொது வினியோகத் திட்ட பொருட்களை வினியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் பணியாளர்களை தேர்வு செய்வது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதால் காலதாமதம் ஏற்படும்.
எனவே அதுவரையிலான இடைப்பட்ட காலத்தில் பொது வினியோகத் திட்டத் பணிகள் தடை இன்றி நடைபெற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு காலிப்பணியிட ரேஷன் கடைகளை தற்காலிகமாக நடத்துவதற்கான நிலையான செயல்முறை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி சுய உதவிக்குழு உறுப்பினர்களை தெரிவு செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையில் மண்டல இணைப்பதிவாளர்கள், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தகுதியான சுய உதவி குழுக்களை கண்டறிந்து உறுப்பினர்களின் தகுதிகளை சரிபார்த்து நியமனம் செய்வார்கள்.
இதற்காக விற்பனையாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களையும், கட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களையும் ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில் எல்லைக்குள் வசிப்பவராகவும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இல்லாதவராகவும், அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கனவே பணியில் இல்லாதவராகவும், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்கள், பணியாளர்களின் நெருங்கிய உறவினர் அல்லாதவராகவும் இருக்கும் நபர்களை தெரிவு செய்து அவர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பெற வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு ரேஷன் கடை விற்பனை தொடர்பான அடிப்படை பயிற்சி வழங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களிடம் இந்த ஒதுக்கீடு முற்றிலும் தற்காலிகமானது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். மேலும் சங்கம் நிர்ணயிக்கும் பிணை வைப்புத் தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திற்கான நம்பக உத்தரவாத காப்பீடு ஆகியவை சங்கத்தால் பெறப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 வீதம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக விற்பனையாளருக்கு ரூ.7,500 மற்றும் கட்டுனர்களுக்கு ரூ.6,600-க்கு மிகாமல் ஊதியம் சம்பந்தப்பட்ட சங்கத்தால் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடிக்காக வழங்கப்படும். மண்டல இணை பதிவாளர் உடன் மேற்கண்ட பணிகளை ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.