தமிழக செய்திகள்

அரூரில்ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூர்:

அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் 60 விவசாயிகள் 350 மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.4,879 முதல் 6,359 வரையும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.4,669 முதல் 5,329 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.