சென்னை,
12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அறிய கடந்த 20-ம் தேதி அரசு டெண்டர் கோரியுது. இதுதொடர்பாக தமிழக அரசின் திட்ட மேம்பாடு நிதி (பிடிஜிஎப்) நிறுவனம் ஒப்பந்தப் புள்ளி (டெண்டர் அறிவிக்கையை விளம்பரமாக வெளியிட்டது.
அதில், ஆவடி, ஓசூர். தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு. சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய 12 மாநகராட்சிகளில், பொது-தனியார் கூட்டாண்மை முறையில் (பிபிபி) திடக்கழிவு சேகரிப்பு மற்றும் எடுத்துச் செல்லும் பணிகளுக்கான ஆலோசனை சேவைகளை வழங்கவும், விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கவும், ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு டெண்டர் கோரப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து தூய்மை பணிகளை தனியார் மயமாக்க அரசு எடுத்த முயற்சிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தவெக கூட்டணியில் உள்ள கம்யூ., விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு, மற்றும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அடுத்து, இதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது.