தென்காசி,
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில், 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய 9 காட்டு யானைகள் கொண்ட கூட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) தென்காசி மாவட்டம் மேக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அருகே முகாமிட்டுள்ளன. இதனால் தங்களின் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்திவிடுமோ என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே யானைகள் நடமாடுவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கவும், அவற்றை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன், பொதுமக்கள் யாரும் வனப்பகுதியையொட்டிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.