தென்காசி,
தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ மாற்றுப்பாதையில் சென்றபோது காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜகுரு (வயது 26). இவருக்கு திருமணமாகி துரைச்செல்வி என்ற மனைவி உள்ளார். ராஜகுரு நேற்று முன்தினம் கடையநல்லூர் அருகே மங்களாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் தனது மனைவி துரைச்செல்வி, மாமியார் உள்பட சிலருடன் குற்றாலத்திற்கு குளிக்க சென்றார். அங்கு குளித்துவிட்டு அனைவரும் ஒரு ஆட்டோவில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இலத்தூர் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது அங்கு ஏற்கனவே கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். எனவே ராஜகுரு பயணித்த ஆட்டோ டிரைவரும், ஆய்க்குடி வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தார்.
ஆய்குடி தனியார் கல்லூரி அருகே சென்றபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ராஜகுரு மீது ஆட்டோ விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் மற்றும் ராஜகுருவின் குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் இலத்தூர் போலீசார் விரைந்து வந்து ராஜகுருவின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.