தென்காசி,
தென்காசியில் புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு மீட்டர் பொருத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். அப்போது அங்கு வயர்மேனாக பணியாற்றி வரும் ஆறுமுகசாமி (வயது 53) என்பவர், மீட்டர் பொருத்த ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசாரின் ஆலோசனையின்படி அந்த நபர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆறுமுகசாமியிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லஞ்சப் பணத்தை வாங்கிய ஆறுமுகசாமியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.