தமிழக செய்திகள்

தென்காசி: மலை பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிய வகை மரங்கள், செடிகள் கருகின

கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தென்காசி,

கடையம் அருகே கோவிந்தப்பேரி பகுதியில் பள்ளகாடுபட்டி பொத்தை மலை உள்ளது. இங்கு அடர்ந்து வளர்ந்த மரங்கள், செடி-கொடிகள், ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. நேற்று இந்த மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் அருகில் இருந்த மரம், செடி-கொடிகள் என அனைத்துக்கும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் உடனே அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயின் தீவிரம் காரணமாக வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் மற்றும் செடி-கொடிகள் கருகின.

மேலும் இந்த தீ விபத்தில் வனவிலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT