தமிழக செய்திகள்

தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

தேவையின்றி மலையடிவார பகுதியில் நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி,

ஆழ்வார்குறிச்சி அருகே குடியிடிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சிறுத்தை நடமாட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் ஆழ்வார் குறிச்சி அருகே சம்பன்குளம் - கோவிந்தப்பேரி சாலையில் மலையடிவார பகுதியான நீலமேகபுரம் பகுதியில் உள்ள ஜபருல்லா என்பவரது தோட்டத்தில் சிறுத்தை சுற்றித் திரிந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை ஓடியது. தொடர்ந்து அது அருகில் உள்ள மலைப்பகுதிக்கு பாய்ந்து சென்றது. அங்கு ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் சிறுத்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை நடமாட்டத்தை அறிந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு

உடனே வனத்துறையினர் விரைந்து சென்று, சிறுத்தை நடமாடிய இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை உறுதிப்படுத்திய வனத்துறையினர், கூண்டு வைத்து அதனை பிடிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். மேலும் அந்தப் பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், தேவையின்றி மலையடிவார பகுதியில் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT