தென்காசி,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம், தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் இயற்கை எழில் பொங்க அமைந்துள்ள புனித தலமான அத்திரிமலையை தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு அருள்மிகு அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கோரக்கர் திருக்கோவில் ஆகியவை ஆன்மிகத் தெளிவை அளிக்கும் தெய்வீக நிலையங்களாக விளங்குகின்றன.
அத்திரி கங்கை எனப்படும் வற்றாத புனித தீர்த்தத்தில் நீராடி, குடும்பத்தாருடன் மனம் நெகிழ்ந்து இறைவனை பக்தியுடன் தரிசித்தேன்.
இந்த புனித தருணத்தில், பாரத தேச மக்கள் அனைவரும் எல்லா வளங்களுடனும், ஆரோக்கியத்துடனும், அமைதியுடனும் இன்புற்று வாழ இறைவனை மனமார வேண்டிக் கொண்டேன்.
“மேலும் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இயற்கையின் அதிசயமான “அத்திரி கங்கை” இயற்கை ஊற்றை காணும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
அத்திரி கங்கை என்பது வருடம் முழுவதும் வற்றாமல் ஓடும் புனிதமான இயற்கை ஊற்று. கடும் வறட்சிக் காலங்களிலும் கூட அதன் ஓட்டம் குறையாது என்பது இயற்கை நமக்கு அளித்த அதிசயங்களில் ஒன்று.
இயற்கையும் ஆன்மீகமும் ஒன்றாக கலந்த இந்த தலத்தின் அழகை பாரத மக்கள் அனைவரும் நேரில் சென்று உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.