கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி ராமநதி அணை உள்ளது. இந்த அணையை சுற்றியுள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீரூற்றுகள், நீரோடைகள், ஆறுகள் மூலம் இந்த அணைக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளது. அவ்வாறு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து அணைக்கு செல்லும் ஆற்றில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான சாரல் மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
கடையம் ராமநதி அணைப்பகுதியையொட்டி கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. நேற்று மதியம் மத்தளம்பாறையை சேர்ந்த 3 பெண்கள், ஒரு ஆண் என 4 சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெய்த மழையால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும் ஆற்றின் மறுகரைக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.
இதைக்கேட்டு அருகிலுள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உரிமையாளர் குமரன் ஆகியோர் அங்கு வந்தனர். சிறிதுநேர காத்திருப்புக்கு பின்னர் மழை சற்று குறைந்ததால், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறைய தொடங்கியது. இதையடுத்து தோட்ட தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டு ஆற்றில் சிக்கியிருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக 4 பேரும் மீட்கப்பட்டதால் ஆற்றில் அடித்து செல்லப்படாமல் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.