கடையநல்லூர்,
அடவிநயினார் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 7,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார்கோவில் அணை உள்ளது. தற்போது இந்த அணையின் கீழ் பாசனம் பெறும் விவசாய நிலங்களில் பிசான சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோனிகா ராணா கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் செயற்பொறியாளர் மணிகண்ட ராஜா, உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம் கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 7,643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அடவிநயினார்கோவில் அணையில் இருந்து 31-3-2027 வரை 135 நாட்களுக்கு. நாள் ஒன்றிற்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம், 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.