தென்காசி,
தென்காசி மாவட்டம், கடையம் அருகே 77 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், வயக்காட்டூர் பகுதியில் வசித்து வந்த ஜானகி (வயது 77), கணவர் காலமான நிலையில் தனது வளர்ப்பு மகன் சிவராமனுடன் வசித்து வந்தார்.
நேற்று சிவராமன் வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜானகியைத் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிவராமன், தனது தாயார் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட எஸ்.பி.யின் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கபட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜானகி வீட்டில் கட்டுமானப் பணிக்காக வந்துசென்ற கீழகுத்தப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த கணேசன்(30) என்பதும், விசாரணையில் கணேசன் மூதாட்டியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்ததும், காதணிகளை ஆலங்குளத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து 97 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினர். குற்றவாளியை விரைந்து கைது செய்து திறம்பட செயல்பட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி. அசோக்குமார் அவர்கள் பாராட்டினார்.