தமிழக செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம்; தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை - தமிழக அரசு தகவல்

மத்திய கிழக்கில் உள்ளவர்களின் உறவினர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மரணத்தையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி வேலை செய்து வரும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 974 பேர் உதவிகேட்டு தொடர்பு கொண்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் தொழில் மற்றும் சுற்றுலாவுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியில் உதவி கேட்டவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, மத்திய கிழக்கில் உள்ளவர்களின் உறவினர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், விமான சேவை தொடங்கப்பட்டவுடன் அனைவரும் பத்திரமாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.