தூத்துக்குடி,
தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் வாய்த்தகராறில், வட மாநில வாலிபரை கட்டையால் அடித்துக் கொலை செய்த ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்ததும் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு 3-ம் மைல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகேயுள்ள மதுபானக் கடையில் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சிலர் அங்கிருந்த கட்டையை எடுத்து சுமார் 27 வயது மதிக்கத்தக்க வட மாநிலத் தொழிலாளி ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வட மாநில தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை தென்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் கொலைக்கான முழுமையான பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.