தமிழக செய்திகள்

திருச்சியில் பரபரப்பு; வீரமலை வனப்பகுதியில் வெடித்து சிதறிய லாஞ்சர் குண்டுகள்

வனப்பகுதியில் கிடக்கும் லாஞ்சர் குண்டுகளைக் வனத்துறையினர் கைப்பற்றிப் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

திருச்சி,

வீரமலை வனப்பகுதியில் லாஞ்சர் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

லாஞ்சர் குண்டு வெடிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரமலை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கமான ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். பயிற்சி மேற்கொள்ளப்படும் போது, சிறிய அளவிலான சில லாஞ்சர் குண்டுகள் வெடிக்காமல் வனப்பகுதியில் விழுந்துவிடுகின்றன. இந்த நிலையில், வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் பொதுமக்கள், ஆங்காங்கே வெடிக்காமல் கிடக்கும் லாஞ்சர் குண்டுகளை அடையாளம் கண்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வனப்பகுதியில் கிடக்கும் லாஞ்சர் குண்டுகளைக் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பில் இருந்த குண்டுகளை செயலிழக்கச் செய்து அழிப்பதற்கான முயற்சியை பாதுகாப்பு படையினர் செய்து வந்தனர்.

இதற்காக சென்னையிலிருந்து வீரமலை வனப்பகுதிக்கு சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில், வீரமலை வனப்பகுதிக்குட்பட்ட 'பீரங்கி மேடு' என்ற இடத்தில் சுமார் 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அதில், சிறிய அளவிலான 2 லாஞ்சர் குண்டுகள் உட்பட கைப்பற்றப்பட்ட மொத்தம் 16 குண்டுகள் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டு, வெடிவைத்து முற்றிலும் அழிக்கப்பட்டன. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இந்த பணியை செய்து முடித்தனர். லாஞ்சர் குண்டுகள் வெடிக்க வைத்தபோது பதிவு செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT