தமிழக செய்திகள்

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து: லாரிக்குள் சிக்கி டிரைவர் உயிரிழப்பு!

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எம்-சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) ஓட்டிச் சென்றார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரிக்குள் சிக்கிய டிரைவர் தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி லாரிக்குள் சிக்கியிருந்த டிரைவரின் உடலை மீட்டனர்.

பிரேத பரிசோதனை

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT