விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை மூர்த்திநாயக்கம்பட்டியில தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் இன்று திடீரென எதிர்பாராதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானில் வெகு தூரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வெடி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்த ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியல் மாற்றத்தின் காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வெடி விபத்தில், பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்து கிடங்கு உள்ளிட்ட 8 அறைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. சேதத்தை கணக்கெடுக்கக்கூடிய பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.