தமிழக செய்திகள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: தனியார் பஸ் நிறுவனர் அடித்துக்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் நிறுவனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

கைகலப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 80). இவர் தனியார் பஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் வசித்து வந்த இவர் நேற்று உறவினர் இல்ல திருமண விழாவிற்காக வேந்தன்பட்டி வந்து தனது வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

அப்போது மாலை 4 மணிக்கு அங்கு வந்த வேந்தன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (55), விஜய் (35) ஆகியோர் திருமண மண்டபம் பிரச்சினை குறித்து சிதம்பரத்திடம் பேசியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

கட்டையால் தாக்கி கொலை

இதையடுத்து ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் சிதம்பரத்தை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிதம்பரத்தை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிதம்பரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தகராறை தடுத்ததில் படுகாயமடைந்த சிதம்பரத்தின் மகள் இந்துமதியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார், சீனிவாசன், விஜய் ஆகிய 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னமராவதி அருகே தனியார் பஸ் நிறுவனர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT