தமிழக செய்திகள்

டெட் தேர்வு: பள்ளிப்பணிகள் பாதிக்காத வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி

ஆசிரியர்களுக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது.

சென்னை,

ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களும் இந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வு

அதன் அடிப்படையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தாள்-1 தேர்வையும், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் தாள்-2 தேர்வையும் எழுத வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த திட்டமிட்டது. இந்த தேர்வு கடந்த ஜூலை 4, 5-ந்தேதிகளில் முறையே தகுதித்தாள்-1. தாள்-2 தேர்வு நடந்து முடிந்தது. இந்த 2 தேர்வுகளையும் சேர்த்து 2 லட்சத்து 20 ஆயிரத்து 464 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 781 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்தநிலையில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மறுதேர்வுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கான சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

நேரடி பயிற்சி

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில், 'பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எதிர்கொள்ளும் வகையில் நேரடி பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. பள்ளிப்பணிகள் பாதிக்காத வகையில் ஆசிரியர்களின் வசதிக்கேற்ப சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13-ந்தேதி

அந்தவகையில், இந்த பயிற்சி வருகிற 31-ந்தேதி. அடுத்த மாதம் (நவம்பர்) 1, 7, 8, 14, 15, 21, 22, 28, 29, டிசம்பர் மாதம் 5, 6, 12, 13-ந்தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள தேதிகளை வைத்து பார்க்கும்போது, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 13-ந்தேதிக்கு பிறகு நடத்தப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

SCROLL FOR NEXT