சென்னை,
தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் தொண்டாற்றிச் சிறப்பிடம் பெற்ற தகைசான்ற நபர்களைப் பெருமைப்படுத்த தமிழ்நாடு அரசால் கடந்த 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் ஒரு உயரிய விருதாகும். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தகைசால் தமிழர் விருதை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.
இந்த விருதை பெறும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2021-ம் ஆண்டு பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கும், 2022-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்ததலைவர் நல்லகண்ணு, 2023-ம் ஆண்டுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 2024-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், 2025-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே. எம்.காதர் மொய்தீன் ஆகியோருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதைதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கும், கல்பனா சாவ்லா விருதை கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என் பவருக்கும் முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்.
அதன்படி, இன்று கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் அந்த விருதை கிருஷ்ணசாமிக்கு வழங்குவார். கிருஷ்ணசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை ஆவார். இவரது மகன் விஷ்ணு பிரசாத் கடலூர் எம்.பி.யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வீரசாகசம் புரிந்தவர்களுக்கு கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 2 முறை தொட்டவர். அதாவது, டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் என்ற உலகிலேயே கடின மான மலையேற்றத்தை அவர் ஏறியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது டயபடாலஜி மருத்துவ பிரிவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் வி.மோகன் என்பவருக்கு வழங்கப்படுகிறது.