தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - விருதுநகரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்

முதற்கட்டமாக 250 பயனாளிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி தங்க மோதிரங்களை வழங்கினார்.

விருதுநகர்,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த திட்டம் மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்துள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த மொத்தம் 2 ஆயிரத்து 676 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக 250 பயனாளிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி தங்க மோதிரங்களை வழங்கினார். இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் வீடு திரும்பும்போதே தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT