சென்னை,
தாய் மாமன் திட்டத்தின் கீழ் எந்தெந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கிடைக்கும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் இன்று தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் (916தரம்) தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. அந்த மோதிரத்தில் தமிழ் நாடு அரசின் சின்னம், பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் இருக்கும்.
இது 'டேம்பர்ப்ரூப்' பேக்கிங்கில் பாதுகாப்பாக வழங்கப்படவுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 4.2 முதல் 4.4 லட்சம் குழந்தைகள் இதனால் பயன் பெறுவார்கள்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெறக் கீழ்க்கண்ட நிபந்தனைகள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்:
தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவசிப்பவராக இருக்க வேண்டும்.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக வந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இத்திட்டத்தில் தகுதி இல்லை.
குழந்தை அரசு மருத்துவமனை அல்லது அரசு சுகாதார மையம் (ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) ஆகியவற்றில் பிறந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படாது. தாய் அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அதன்படி அடையாள எண் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
கர்ப்பிணிகளுக்கு முன்பு அரசு ரூ.12,000 உதவித்தொகையை 3 தவணைகளாக வழங்கி வந்தது. இப்போது அதே நிதிதான் தங்க மோதிரம் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
பாலினம், பிறப்புவரிசை (முதல் குழந்தை. இரண்டாவது குழந்தை என எந்த வரிசையாக இருந்தாலும்) எந்த கட்டுப்பாடும் இல்லை. இரட்டை குழந்தைகள் பிறந்தால் இரண்டு மோதிரங்கள் வழங்கப்படும்.
பல முறை பிரசவித்ததாய்மார்களுக்கும் இதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அதாவது எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தாய் மாமன் தங்க மோதிரம் பெற விரும்பும் கர்ப்பிணி தாய் கீழ்க்கண்ட முகவரி ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது)
வாக்காளர் அடையான அட்டை
ஆதார் அட்டை
தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை
அஞ்சல் துறை முகவரிச்சான்று
இருப்பிடச் சான்றிதழ் அல்லது பிறப்பிடச் சான்றிதழ்
கூடுதலாக கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள்
தாயின் ஆதார் அட்டை
தாய் அமைப்பில்பதிவுச் சான்று
குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் அல்லது மருத்துவமனை பிரசவப்பதிவு சான்று
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போதே மேற்கண்ட ஆவணங்களை சரிபார்த்து மோதிரம் வழங்கப்படும்.
சில இடங்களில் முக அடையாளம் மற்றும் பயோ மெட்ரிக் சரிபார்ப்பும் நடைபெறும்.
மோதிரம் பெறுவதற்காக ஆன்லைனில் தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்தாள் தானாகவே தகுதிகளை சரிபார்த்து டிஸ்சார்ஜ் ஆகும் போது வழங்கிவிடுவார்கள்.
கர்ப்பம் தரித்த 3 மாதத்திற்குள் அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும். பிரசவம் அரசு மருத்துவமனையில் நடக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து குழந்தைக்கு தங்க மோதிரம் தருவார்கள்.
மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களில் மோதிரம் வழங்கப்படுகிறது. அருகிலுள்ள மையத்தை அணுகி ஆவணங்களுடன் செல்லவேண்டும். செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை பிறந்த குழந்தைகள் அங்குச்சென்று ஆவணங்களை காட்டி மோதிரம் வாங்கலாம். ஆனால் 2026 செப்டம்பர் 28 முதல் (இன்று முதல்) பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போதே நேரடியாக மோதிரம் வழங்கப்படும்.