கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் திட்டத்தை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

மதுரை,

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை (28-ந்தேதி) தொடங்கி வைக்கப்படுகிறது.

த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்ற இத்திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ.755 கோடி ஒதுக்கீடு

இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சார்பில் வழங்கப்படும் சீர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டத்துக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

1.28 லட்சம் மோதிரங்கள்

முதற்கட்டமாக 4 மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயாராக உள்ளன.

மதுரையில் நடைபெறும் விழாவுக்கான முன்னேற்பாடாக 1,106 தங்க மோதிரங்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கடந்த வாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மதுரைக்கு மாற்றப்பட்ட தொடக்க விழா

முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் திட்டத்தை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தெருக்கள் குறுகலாக இருப்பதாலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிரமம் ஏற்படும் என்பதாலும் தொடக்க விழா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

முதலமைச்சர் விஜய் பங்கேற்பு

திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பிரசவ வார்டு பகுதிக்கு சென்று, பிறந்த குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.

முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பனகல் சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டதுடன், மருத்துவமனை வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சேதமடைந்த கட்டிடப் பகுதிகள் சீரமைக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் பயணிக்கும் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

107 அரசு மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு

தமிழகம் முழுவதும் உள்ள 107 அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூலம் மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT