தமிழக செய்திகள்

தாய்மாமன் திட்டம்: முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை தயாரித்து வழங்கிய ஜோய் ஆலுக்காஸ்!

அதிக பிரசவங்கள் நடைபெறும் 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுடைய குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 89,955 மோதிரங்கள்

இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30 சதவீதமும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட முதல் கட்டப் பணியின் அடிப்படையில் 89,955 தங்க மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 கேரட் தங்கம்; ஹால்மார்க் முத்திரை

தயாரிக்கப்பட்ட மோதிரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிராம் எடை மற்றும் 22 கேரட் தூய்மைத் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மோதிரத்திலும் பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் 6 இலக்க எச்.யூ.ஐ.டி. எண் இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

107 அரசு மையங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 89,955 மோதிரங்கள், அதிக அளவில் பிரசவங்கள் நடைபெறும் 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதிரங்களை பாதுகாப்பாக பேக்கிங் செய்து அனுப்பும் பணிகள் சென்னை மற்றும் கோவையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் மையங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

“பெருமையாக கருதுகிறோம்” - ஜோய் ஆலுக்காஸ்

இதுகுறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் தங்கள் நிறுவனம் இணைந்திருப்பதை பெருமையாக கருதுவதாகவும், தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT