மதுரை,
1.28 லட்சம் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார்.
இதற்காக முதல் அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை வழிநெடுக மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடி முதல் அமைச்சர் விஜய் வந்தார்.
பின்னர் ரோடு ஷோ'வாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு முதல் அமைச்சர் விஜய் வந்தார். அங்கு குவிந்திருந்த மக்கள், வாலிபர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற விழாவில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் பிற அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தன் கைகளால், தங்க மோதிரங்களை அணிவித்தார். மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று, அந்த ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும் அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் உள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. 22.6.2026 அன்று முதல் தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.