கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள். 
தமிழக செய்திகள்

தைப்பூச திருவிழா கோலாகலம்... காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் திருவிழா களைகட்டி உள்ளது. இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் சாரை சாரையாக சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்கின்றனர். அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறுவாபுரி

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விநாயகர்,மூலவர், ஆதிமூலவர் உள்ளிட்ட பிரகார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தைப்பூசம், தை பௌர்ணமி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் இன்று சிறுவாபுரியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அகரம் கூட்டுச்சாலையிலும் புதுரோடு கூட்டுச்சாலையிலும் வாகனங்கள் நிறுத்த உரிய இடத்தை ஒதுக்கீடு செய்யாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன. இதனால் ஆரணி-புதுவாயல் நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுச்சாலையை கடந்து செல்ல பல மணி நேரம் ஆனது.

பெரியபாளையம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், 3.30 மணிக்கு வாழை மர பூஜை, கோ பூஜை, வினாயகர், மாதங்கி, முருகர், மூலவர் பவானி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு 108 சங்கு ஸ்தாபன பூஜையும், கங்கை நீர் திரட்டல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், கணபதி பூஜை, கலச பூஜை, ஹோமம், மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதன் பின்னர், பவானி அம்மன் மூலவருக்கு 108 வலம்புரி சங்கு தீர்த்த அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர், மங்கள ஆரத்தி நடைபெற்றது.

“தைப்பூசம், தை பௌர்ணமி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் இன்று சிறுவாபுரியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது”

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் 89ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. தைப்பூச நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Also read:சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்

இதே போல உத்தனப்பள்ளி அருகே அகரம் முருகன் கோவில், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி சின்னட்டி சின்னபழனி பால முருகன் கோவில், ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன், கிருஷ்ணகிரி பழையபேட்டை செந்தூர் முருகன், ஜெகதேவி பாலமுருகன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Also read:கேட்ட வரம் அருளும் சிறுவாபுரி முருகன்

சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில்

திருப்பூர் காங்கயம், சிவன்மலை, சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 23ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் துவங்கியது. கடந்த, 26ம் தேதி கொடியேற்றப்பட்டு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு சுவாமி ரதத்துக்கு எழுந்தருளினார். மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

நாளை மாலை, 2ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 6 ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 7ம் தேதி 9 மணிக்கு மஹா தரிசனம் நடக்க உள்ளது. 10ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.