தமிழக செய்திகள்

தஞ்சாவூர்: மனு அளித்தும் பயன் இல்லை; புதிய தடுப்பணை கட்டும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் முற்றிலும் உடைந்த வல்லம்வாரி தடுப்பணையை ரூ.2 லட்சம் செலவில் விவசாயிகளே ஒன்று சேர்ந்து கட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்காலில் தடுப்பணை அமைக்க பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகளே தடுப்பணையை கட்டி வருகின்றனர்.

தடுப்பணையால் பாசன வசதி பெறும் 1,500 ஏக்கர் நிலங்கள்

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம்புதூரில் உருவாகும் வல்லம்வாரி, தஞ்சர்வூர் வழியாக 30 கி.மீ. துாரம் பயணித்து, திருவாரூர் மாவட்டம் வடுவூர் கண்ணனாற்றில் கலக்கிறது. இந்த வல்லம்வாரி மழைநீர் வடிகால் வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெய்வாசல் கிராமத்தில் வல்லம்வாரியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணை, குலமங்கலம் பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட சடையன் ஏரிக்கும், 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெய்வாசல் ஏரிக்கும் நீர்ப்பாசனத்தை அளித்து வருகிறது. இந்த இரண்டு ஏரிகள் மூலம் 1,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை

ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக வல்லம்வாரி தடுப்பணை முற்றிலும் உடைந்ததால், ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. புதிய தடுப்பணை கட்டித் தரக்கோரி, கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

புதிய தடுப்பணை கட்டும் விவசாயிகள்

இதையடுத்து, இப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து, ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நிதி திரட்டி, புதிய தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT