தஞ்சை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கச்சார்குளத்தெரு, கும்பகோணம்-காரைக்கால் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (75). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று அவரது வீட்டுக்கு முகத்தை மூடியபடி வந்த பெண் ஒருவர், வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கூறி தவமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பெண், தவமணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில் சங்கிலியில் இருந்த டாலர் மட்டும் தவமணியின் கையில் மாட்டிக்கொண்ட நிலையில், மீதமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த பெண் தப்பி ஓடினார். அவரை தவமணி விரட்டிச் சென்றபோது, அந்த பெண் மிளகாய் பொடியை தூவி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பெண் ஒருவர் துணிகரமாக தங்க சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் திருநாகேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.