தமிழக செய்திகள்

நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று முன்தினம் காலமானார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மதிப்புமிக்க தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு (101) நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார். அவரது நல்லுடல் அன்று மாலை 5 மணி முதல் 26.02.2026 ஆம் தேதி பிற்பகல் 3 மணிவரை தியாகராயர் நகர், சிவாஜிகணேசன் சாலையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மதியம் 01.25 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செவ்வணக்கம் செலுத்தினார். காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அவரது நல்லுடல் 3.15 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இருந்து செங்கொடி அணி வகுப்புடன், பல ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அவரை எடுத்துச் சென்ற ஊர்தியுடன் பேரணியாகச் சென்று, மாலை 6 மணியளவில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்காக மருத்துவமனைக்கு கொடையளிக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களும், தோழர் இரா. நல்லகண்ணு குடும்பத்தினரும் வழங்கிய உடல் கொடையை கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் சாந்தாராம் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழு பெற்றுக் கொண்டது.

தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு 2025 ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி புரையேற்றப் பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுக்கு மிகச் சிறந்த முறையில் உயர்ந்தபட்ச சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு தொடர்ந்து, நேரடியாக கண்காணித்தும் வந்தார். அவ்வப்போது மருத்துவ மனைக்கு நேரில் வந்து பார்த்து மருத்துவர் குழுவுடன் இடைவிடாத தொடர்பில் இருந்து வந்தார். அதேபோல் கண்காணித்து வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கும்,

மேலும் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (டீன்) டாக்டர் சாந்தாராம், தீவிர கண்காணிப்பு மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் சுதாகர், இவர்களுடன் இணைந்து பணிபுரிந்த மருத்துவர்கள் குழு மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பரிசோதனை தொழில்நுட்பப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாவல் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அன்னாரது மறைவுச் செய்தி கேட்டதும், தோழர் இரா. நல்லகண்ணுவுக்கு தமிழ்நாடு அரசு முழு மரியாதை செலுத்த உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கும், அவருடன் நேரில் வந்து மலர் அஞ்சலி செலுத்திய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்ததோடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து நேரில் அஞ்சலி செலுத்தியதற்கும், தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இன்னாள், முன்னாள் நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு தளங்களில் செயல்படும் சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், அரசுத்துறை உயர்நிலை அலுவலர்கள், திரையுலக கலைஞர்கள், இயக்குநர்கள்,

தொழில் நுட்ப கலைஞர்கள், முனைவர் மு. நாகநாதன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்கள், மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர்.குசேலர் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்க தலைவர்கள், மாணவர், இளைஞர், மாதர் அமைப்பினர், அச்சு மற்றும் மின்னணு ஊடக செய்தியாளர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து திரண்டு வந்த கட்சி மற்றும் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள், அன்னாரின் இறுதி நிகழ்வுக்கும், ஊர்வலத்திற்கும் தக்க ஏற்பாடுகள் செய்து உதவிய சென்னை பெருநகர காவல்துறையினர், பெரு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இதயபூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.