தாராபுரம்,
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் ’ரோடு ஷோ’வில் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் த.வெ.க.. தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாராபுரம் தொகுதி முழுவதும் இரவு, பகலாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தாராபுரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ’ரோடு ஷோ’-வில் ஈடுபட்டு வருகிறார்.
தாராபுரம் மாருதி நகரில் இருந்து பிரசார வேனில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ-வில் ஈடுபட்டு வருகிறார். பிரசார வாகனத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவும் உடன் செல்லும் நிலையில் அவருக்கு ஆதரவு கேட்டு முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தை காண வழியெங்கும் ஆயிரக்கணக்கான தவெக கட்சி தொண்டர்கள் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.