சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் நாளை மறுதினம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் இன்று தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) தொகுதியில் ’ரோடு ஷோ’ நடத்த உள்ளார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தற்போது கோவை புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகருக்கு முதல்-அமைச்சர் விஜய் செல்கிறார். பின்னர் அங்கிருந்து திறந்த வாகனத்தில் இருந்தவாறு அவர் ’ரோடு ஷோ’ நடத்துகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை, திருப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.