தமிழக செய்திகள்

தவெக கோஷ்டி மோதல்.. எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு: தேனியில் பரபரப்பு

எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

தேனி,

தேனியில், ஜன்நாயகன் திரைப்படம் காண வந்த த.வெ.க.,வினருக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கம்பம் த.வெ.க., எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, 50, என்பவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய் நடித்த, ஜனநாயகன் படம் நேற்று வெளியானது. இதற்காக, தேனி மாவட்டம், சின்னமனுாரில் உள்ள தியேட் டரில், 'கேக்' வெட்டுவதற்காக, கம்பம் த.வெ.க., எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, இரு கார்களில் சென்றார் .

அப்போது, தேனி தெற்கு மாவட்ட செயலர் பாண்டி ஆதரவாளர்களுக்கும், ஜெகநாத் மிஸ்ரா ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், ஜெகநாத் மிஸ்ராவின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது.

இரு தரப்பினரும், சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த நிலையில், இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதையடுத்து,

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்த பின், கலைந்து சென்றனர். சேதமடைந்த கார், போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.