சென்னை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 6-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர்.
இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இப்பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை பள்ளிக்கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி, நாளை மறுநாள் (20-ம் தேதி) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மாணவர்கள் தங்களது பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, கீழே உள்ள அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஜூன் 1 முதல் 3-ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் என்று தெரிவித்தார். முன்னதாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.