தமிழக செய்திகள்

சென்னை அருகே கல்லூரியில் மாணவி, மாணவர் செயலால் காலவரையற்ற விடுமுறை அறிவித்த நிர்வாகம்

தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவத்தால் மாணவ-மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை,

சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்று மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்லூரி வளாகத்தில்

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் கல்லூரி பஸ் மூலம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், நேற்று மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

5-வது மாடியில்

கல்லூரி வேலை நேரத்தில் மாணவி ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெரின் (19). ஏ.ஐ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவரது தந்தை அருள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். தாயார் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். பெற்றோருக்கு ஷெரின் ஒரே மகள் ஆவார். வழக்கம் போல கல்லூரிக்கு வந்த ஷெரின் திடீ ரென 5-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில் பெற்றோர் அன்பும், அரவணைப்பும் இல்லாததால் இந்த முடிவை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ - மாணவிகள் அதிர்ச்சி

மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள் சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19). இவர் நேற்று கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன. உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள்

மாணவர் சசிதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்றும் அதனால் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கல்லூரி மாணவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றதை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காலவரையற்ற விடுமுறை

தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவத்தால் மாணவ-மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை நேற்று அறிவித்தது.

கல்லூரி வளாகத்தில் தங்கிப் படித்த விடுதி மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அந்த கல்லூரி 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT