நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது! - நயினார் நாகேந்திரன்

தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும், பாஜகவும் சதி செய்வதாக பழி சுமத்துவது வேடிக்கையாக இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையான நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அபாண்டமான பழி

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அது கண்ணாடி, நிர்மல்குமாரே!

மக்களை அனுதினமும் விலைவாசியால் வதைக்கும் விதமாக ஒரு யூனிட்டை ரூ.41-க்கு மின்சாரக் கொள்முதல் செய்ய முயற்சித்ததில் தொடங்கி கைதிகள் தப்பியோடல் வரை, தொடர்ந்து தனது துறையில் நடக்கும் தவறுகளைத் தடுக்க வழி தெரியாமல், தற்போது தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அடிப்படையே இல்லாத ஒரு அபாண்டமான பழியை நீங்கள் சுமத்தியுள்ளதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது.

மடைமாற்று வேலைகளுக்கு மடியமாட்டார்கள்

மக்கள் அளித்த தீர்ப்பை அவமதித்து, வென்ற மாற்றுக் கட்சி வேட்பாளர்களை விலைபேசி வலை விரித்து இழுத்து, இடைத்தேர்தலில் மட்டுமே கண்ணாக இருக்கும் தவெக, தற்போது மற்ற கட்சியினர் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களை வாங்க முயற்சிப்பதாக சொல்வது ஆகச்சிறந்த நகைமுரண்! தங்களது இந்த மட்டமான பொய்யை மொக்கை காமெடி என்று மக்கள் கடந்துதான் செல்வார்களே ஒழிய, தங்களது மடைமாற்று வேலைகளுக்கு மடியமாட்டார்கள்!

நீங்கள் எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையான நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது! எனவே, அடுத்தவரைப் பார்த்து வீணாக குறை சொல்லும் முன், முதலில் குதிரைப் பேரத்தை விடுத்து, குடிமக்களின் நலனில் கவனத்தைச் செலுத்துங்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT