சென்னை,
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பரபரப்பு பதிவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம். இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக இருந்த நிலையில் இன்றைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் 3-ம் நிலைக்கு தள்ளப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதற்கு யார் காரணம்? என்று சற்று சிந்தித்து பாருங்கள்.
இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ தொண்டர்கள், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர். இயக்கத்தின் நிர்வாகிகள் தனிமனித விருப்பு, வெறுப்புகளை மறந்து தொண்டர்களின் நிலைமையை உணரவேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வென்று, இயக்கம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யார் காதிலும் விழவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று.
இந்த முடிவு கூட தமிழக மக்களின் நலன் கருதிதான் எடுக்கப்பட்டது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என்று தான் தனியாக களம் காணவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைக்கு என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
தி.மு.க. மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லியும் வந்தேன். இதில் மறைந்துள்ள உண்மை என்னவென்றால், இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியை, அ.தி.மு.க.வால் பெற்றிருக்கமுடியும்.
அதற்கான சூழ்நிலை இருந்தநிலையில் தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அ.தி.மு.க.வுக்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தனக்கு தானே தலைவராக அறிவித்துக்கொண்டவர்கள், தி.மு.க.வினரோடு இந்த தேர்தலில் கைகோர்த்து நின்றதால்தான் இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்.
இதனை இன்றைய எம்.எல்.ஏ.க்களே தற்போது வெளிப்படுத்தியிருப்பது கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையளிக்கிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணர்ந்து தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இயக்கத்திற்கும், கட்சி தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்பதை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள். "ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.