தமிழக செய்திகள்

குதிரைபேரத்தை திசை திருப்பவே பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு - எடப்பாடி பழனிசாமி சாடல்

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி என்பது விஞ்ஞான ஏமாற்றுவேலை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

விவசாய கடன் தள்ளுபடி

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு

இருப்பதாவது:-

ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அந்த கடன் தொகை முழுவதுமாக (100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்துக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன் தரும்.

இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1.5.2025 முதல் 28.2.2026 வரை கூட்டுறவு வங்கி களில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14 லட்சத்து 22 ஆயிரத்து 555 விவசாயிகள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 44 கோடியே 46 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி என்பது விஞ்ஞான ஏமாற்று வேலை, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலை அரங்கேற்றம் நடந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளவதாவது:-

“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.

குதிரை பேரம்

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!

எனது தலைமையிலான அதிமுக அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.

ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?

தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!

விவசாயி

மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!

சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் முதல்-அமைச்சர் அவர்களே என அதில் பதிவிட்டுள்ளார்.