தமிழக செய்திகள்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்க: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிந்து கொள்ளல் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.