தமிழக செய்திகள்

“கை" தமிழகப் பெண்கள் மீதும் தைரியமாக படர முயல்வது கடும் கண்டனத்திற்குரியது - நயினார் நாகேந்திரன்

தவெகவினரும், காங்கிரஸும் பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறிக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

சென்னை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காங்கிரசின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹரிநாராயணன் என்பவர் கைதாகியுள்ளது, கடும் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கறைபடிந்த காங்கிரஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாரத்தான் ஓடிக் களைத்துப் போயிருந்த சிறுமிகளிடம், காங்கிரஸ் அமைச்சர் விரும்பத் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று வெளியான செய்தியின் சூடு தணிவதற்குள், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காங்கிரசின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹரிநாராயணன் என்பவர் கைதாகியுள்ளது, கடும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காக முதல்-அமைச்சர் விஜய் அமைத்த “சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை”, தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் தான் முதலில் “ரெய்டு” நடத்த வேண்டும் போல. அந்தளவிற்கு ஆட்சி அதிகாரத்தை கேடயமாக வைத்துக் கொண்டு, தவெகவினரும், அவர்களின் கூட்டாளியான காங்கிரஸும் பெண்களிடம் பயமின்றி தொடர்ந்து பாலியல் அத்துமீறிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றச்சாட்டுகளால் கறைபடிந்த காங்கிரஸின் “கை", தற்போது தமிழகப் பெண்கள் மீதும் தைரியமாக படர முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

பெண்கள் பாதுகாப்பு

எனவே, தனது சொந்தக் கட்சிக்குள்ளும், தனது கூட்டணிக் கட்சிக்குள்ளும் இருக்கும் காமுகர்களை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்றைக்கு முற்றிலுமாக ஒழிக்கிறாரோ, அப்பொழுதுதான் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.