சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ நிலையத்தின் பி4 நுழைவுவாயில் (BSNL அலுவலகம் நோக்கி செல்லும் வழி), வரும் மார்ச் 23, 2026 முதல் நிரந்தரமாக மூடப்படுப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொதுமக்களுக்கும், மெட்ரோ பயணிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறது.
இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் சுலபமாக்குவதற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் உள்ள தற்போதைய B4 நுழைவாயிலை மூடுவது அவசியமாகும். இது நீண்ட கால அடிப்படையில் போக்குவரத்து இணைப்பு, பயணிகளின் வசதி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை உறுதி செய்யும். மேலும், தற்போதுள்ள முதலாம் கட்ட நந்தனம் மெட்ரோ நிலையத்திற்கான அணுகல் வசதி, இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் புதிதாகத் திறக்கப்படவுள்ள மெட்ரோ நிலைய நுழைவாயில் வழியாகப் பயணிகளுக்குக் கிடைக்கும்.
பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு, அருகிலுள்ள மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
B4 நுழைவாயிலின் அதேதிசையில் அமைந்துள்ள A2 மற்றும் A3 நுழைவாயில்கள்,
மேலும் எதிர்புறத்தில் அமைந்துள்ள B1, B2, மற்றும் B3 நுழைவாயில்கள்;
இந்த நுழைவாயில்கள் அனைத்தும் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளன. இவை முழுமையாகச் செயல்படுவதால், பயணிகள் எந்தவொரு சிரமமுமின்றி இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயணிகள் எளிதாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களிலும் போதுமான வழிகாட்டிப் பலகைகள் மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், பயணிகள் உதவிக்கு நிலைய பணியாளர்களை அணுகலாம்.
பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது மற்றும் பயணிகளின் தொடர்ந்த ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.