தமிழக செய்திகள்

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானையை காப்பாற்ற வேண்டும் – சசிகலா கோரிக்கை

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குட்டி யானையை வண்டலூர் கொண்டு வந்து அங்கு தனியாக பராமரிக்கப்பட்டது.

சென்னை,

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. கடந்த மாதம் சுமார் 3 மாதமான ஒரு குட்டி யானை தனியாகப் பிரிந்துள்ள நிலையில், தனது தாயையும், கூட்டத்தையும் தேடி அந்தக் குட்டி யானை பரிதவிப்புடன் சாலையோரங்களில் சுற்றி திரிந்துள்ள தகவல் அறிந்து வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

இவ்வாறு தாயை விட்டு பிரிந்த குட்டி யானையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் இது போன்று தாயை பிரிந்து வந்த குட்டி யானையை சென்னையிலுள்ள வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வந்து அங்கு தனியாக பராமரிக்கப்பட்டது. இதற்காக ஆவின் நிறுவனத்திலிருந்து பால் பவுடர் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது. மேலும், அதற்கு தேவையான உணவு, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகளை அளித்து சிறிது காலம் வளர்க்கப்பட்டு, அதன் பின்னர் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் கொண்டு சேர்த்து, அங்கும் குறிப்பிட்ட காலம் தனியாக வைத்து பராமரித்து அதன் பின்னர் மற்ற யானைகளோடு சேர்க்கப்பட்டது. எனவே, தற்போது அமைந்துள்ள புதிய அரசும் இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்து, சிறுமுகை வனப்பகுதியில் தாயை விட்டு பிரிந்த குட்டி யானையை காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.