தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் ஒலிக்கப்போகும் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி!

200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மணி பல ஆண்டுகள் ஒலிக்காமல் இருந்துவந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவிலில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி மீண்டும் ஒலிக்கப் போகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 137 அடி உயரம், 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

கோபுரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், அதன் 9-வது நிலையில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பித்தளையால் ஆன பிரமாண்ட மணி பொறுத்தப்பட்டுள்ளது.

உச்சிக்கால பூஜையில் ஒலித்தது

சிறந்த முருக பக்தரான வீரபாண்டிய கட்டபொம்மனால் கொடுக்கப்பட்ட இந்த மணி, அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் (1760-1799) மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது ஒலிக்கப்படும். ஆனால், திருச்செந்தூரில் ஒலிக்கும் இந்த மணியின் ஓசை 58 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வரை கேட்பதில்லை.

திருச்செந்தூர் கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்ற பிறகே, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி, வீரசக்கதேவி ஆகியோரை பூஜை செய்து வணங்கிவிட்டு மதிய உணவு சாப்பிட நினைத்தாராம்.

40 இடங்களில் மணி மண்டபம் அமைப்பு

அதனால், திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை வரிசையாக 40 இடங்களில் மணி மண்டபங்களை அமைத்து பிரமாண்ட மணிகளை தொங்கவிடச் செய்தார். சரியாக மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் உச்சிக்கால பூஜை தொடங்கும்போது, அங்குள்ள மணி ஒலிக்கப்படும்.

அந்த ஒலி திருச்செந்தூர் அருகே உள்ள மணி மண்டபத்துக்கு கேட்கும். உடனே, அங்குள்ள பணியாளர், மணி மண்டபத்தில் உள்ள மணியை ஒலிக்கச் செய்வார். இப்படியே, வரிசையாக 39 இடங்களில் உள்ள மணி மண்டபங்களில் மணிகள் ஒலிக்கப்படும். நிறைவாக இந்த ஒலி பாஞ்சாலங்குறிச்சி வரை எட்டும்.

பக்தர்கள் கோரிக்கை

மணி ஓசையை கேட்ட பிறகே, வீரபாண்டிய கட்டப்பொம்மன், சுப்பிரமணிய சுவாமி, வீரசக்கதேவி ஆகியோருக்கு பூஜை செய்துவிட்டு மதிய உணவு அருந்துவார். அந்த வகையில் சிறப்பு பெற்ற, 200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மணி பல ஆண்டுகள் ஒலிக்காமல் இருந்துவந்தது.

பக்தர்களுக்கு இந்த மணி குறித்த வரலாறு தெரியத் தொடங்கிய பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆசைக்கு இணைக்க உச்சிக்கால பூஜையின்போது மணியை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆவணி திருவிழாவில் மணி ஒலிக்குமா?

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு (2025), வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ராட்சத பித்தளை மணி புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, உச்சிக்கால (மதியம் 12 மணி) பூஜையின்போது இந்த ராட்சத மணியை ஒலிக்கச் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த மணியில் உள்ள கயிற்றை 3 பணியாளர்கள் சேர்ந்து இழுத்து மணியை அசைத்தால்தான் ஒலியை எழுப்ப முடியும். அதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உச்சிக்கால பூஜை முடியும் வரை 5 நிமிடங்கள் இந்த மணி ஒலிக்கப்படும்.

திருச்செந்தூர் கோவிலில் விரைவில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி ஒலிக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆவணி மாத திருவிழா காலத்திலேயே கோவில் மணி ஒலிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி அதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தான் எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT