தமிழக செய்திகள்

பறவைகள் சரணாலயம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்-சட்டசபை ஏடுகள் குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் தகவல்

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று நெல்லையில் சட்டசபை ஏடுகள் குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று நெல்லையில் சட்டசபை ஏடுகள் குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வு

தமிழக சட்டசபை ஏடுகள் குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், உறுப்பினர்கள் அப்துல் வகாப், தேன்மொழி, நல்லதம்பி, அமலுவேலு, மகாராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆகியவற்றின் கணக்குகள் ஏடுகள் குழுவின் முன்பு சமர்ப்பிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நுகர்வோர் வாணிப கழகத்தின் 2020-2021-ம் ஆண்டிற்கான கணக்குகளை வருகிற நவம்பர் மாதம் சட்டசபை கூடுவதால் அதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மேலும் சுற்றுலாதுறையின் சார்பில் குற்றாலத்தில் ரூ.14 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் பணிகளை அரசு ஆணை வெளியானதும் தொடங்க உத்தரவிட்டார்.

பேட்டி

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் நோக்கம் நிறைவேறும் வகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 30 ஆண்டுகளாக வறண்டு கிடந்த மானூர் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு கால்வாய்களை தூர்வாரி 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அனுமன் நதியின் கீழ் 99 குளங்களுக்கு பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்திலுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து 9 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சர்வதேச தரத்திற்கு

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அதிக எண்ணிக்கையில் பறவைகள் வருவதால் இந்த பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். மணிமுத்தாறு அணை பகுதியை மேம்படுத்தி எக்கோ பார்க் அமைக்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

இவர் அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், சட்டசபை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் பூபாலன், ஊரக வளர்ச்சி மாமி திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.