தமிழக செய்திகள்

பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜுனா

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது இந்திய குடிமக்களின் கடமை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

மத்திய பாஜக அரசின் பாரபட்சமான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்!

இந்திய நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்!

'அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026' என்ற தொகுதி மறுசீரமைப்புக்கான சட்ட மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மக்கள் தொகையினை அடிப்படையாக வைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவுகளை இந்த மசோதா கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கும் தேவையான 'மக்கள் தொகை கட்டுப்பாடு' ஆகிய திட்டங்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் சரியாகப் பின்பற்றி வந்திருக்கின்றன. இதற்கான 'தண்டனையாக' தற்போது, தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான போக்கை மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தற்போது நடக்கவிருக்கும் முன்மொழிவுகள் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள்

* நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வடமாநிலங்களை ஒப்பிடும்போது தென் மாநிலங்களுக்கு சொற்ப அளவே உயரும்

* வடமாநில உறுப்பினர்கள் மற்றும் தென் மாநில உறுப்பினர்கள் இடையேயான விகிதாச்சார வித்தியாசம் பன்மடங்கு அதிகரிக்கும்

* நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களுக்கான குரல்வளை நெறிக்கப்படும். தென் மாநிலங்களின் மொழி மற்றும் கலாசார உரிமைகள் சார்ந்த தேவைகள் மட்டுப்படுத்தப்படும்

* இந்திய நாட்டிற்கான செயல்திட்டங்கள் வகுப்பது, புதிய சட்டம் இயற்றுவது ஆகியவற்றில் தென் மாநிலங்களின் குரல்கள் ஒரு பொருட்டே இல்லாமல் போகும்

* ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நடக்கும் பாரபட்சமான நிதிப்பகிர்வு இன்னும் மோசமான நிலையை எட்டும்

* புதிய திட்டங்கள் வகுக்கும்போது மக்கள் தொகையைக் காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கான போதுமான நிதி கேள்விக்குறியாக நேரிடும்

* மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏற்றத்தாழ்வு தலைவிரித்தாடும்

* தேர்தலில் ஜெயிக்க ஒருசில வடமாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகி, தென் மாநில நலன் முற்றிலும் புறக்கணிக்கப்படும்

இவ்வாறு, தென் மாநிலங்களின் அதிகாரம், பிரதிநிதித்துவம், நிதிப் பகிர்வு ஆகிய அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க வாய்ப்புள்ள இந்த நடவடிக்கை இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பே பன்முகத்தன்மையை பேண வேண்டும், வாய்ப்புகளைப் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதே. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது இந்திய குடிமக்களாகிய நமது அனைவரின் கடமை. எனவே, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, தற்போது தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள முயல்வதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.